சென்னை
பல்கலைக்கழகங்கள் பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும் எனத் தமிழக அரசு உயர்கல்வித்துறை உத்தரவு இட்டுள்ளது.
தமிழக உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர் டி கார்த்திகேயன் நேற்று அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில், “சென்ற டிச.10-ம் தேதி நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி தற்போது சில அறிவுறுத்தல்கள் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படுகின்றன.
பல்கலை. பாடத்திட்டங்களை மாற்றம் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு பாடத்திட்டத்தை மாற்றியமைத்த பின்பு கணிதம், புள்ளியியல் மற்றும் தமிழ் இலக்கிய பாடங்களை மட்டும் ஆய்வுக்காக அரசு மற்றும் உயர்கல்வித் துறைக்கு அனுப்பவேண்டும்.
தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தில் தேர்வு டிஜிட்டல் முறையில் நவீனமயமாக்கப்பட்டு உள்ளது. அங்கு மாணவர்கள் காகிதமில்லாத் தேர்வை எழுதி வருகின்றனர். திருவள்ளுவர் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர்களும் இதைப்போல் தங்கள் தேர்வு முறையை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வர உள்ள பருவத்தேர்விலேயே 20 சதவீதம் தேர்வைக் காகிதமில்லா முறையில் நடத்த வேண்டும்.
தமிழக திறந்தநிலை பல்கலை.யும் காகிதமில்லாத் தேர்வைச் சோதனை முறையில் மேற்கொள்ள வேண்டும். மேலும் அனைத்துப் பல்கலைக்கழகங்களும் தேர்வை நடத்துவதற்குப் பிரத்தியேக சர்வரை உருவாக்க வேண்டும்.
தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்ஐஆர்எஃப்), தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (நாக்) வழங்கும் மதிப்பீடுகளில் அதிக புள்ளிகளைப் பெறுவதற்குப் பல்கலைக்கழகங்களில் தனிப்பிரிவை உருவாக்க வேண்டும்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் ஆய்வு இருக்கையும், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகங்களில் வ.உ.சிதம்பரனார் பெயரில் ஆய்வு இருக்கையும் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு செயல் திட்டங்களை உரிய காலத்தில் செய்து முடிக்க வேண்டும்.” எனக் கூறப்பட்டுள்ளது.