சென்னை: கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட இந்த காலக்கட்டத்தில், சென்னையில் சாலை சீரமைப்பு பணிகள் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி முடுக்கி விட்டுள்ளார். சேதமடைந்த சாலைகள் இரவு நேரங்களில் சீரமைக்கும் பணி விரைவுபடுத்தப்படுகிறது.
வடகிழக்கு பருவமழையால் சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளப்பாதிப்பால், பெரும்பாலான சாலைகள் சேதமடைந்தன. இந்த சாலைகள் செப்பனிடும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது சென்னையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இரவு நேர ஊடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால், இரவு நேரங்களில் சாலைப்பணிகளை வாகன தொந்தரவுகள் இன்று விரைவாக செய்து முடிக்க மாநகராட்சி திட்டமிட்டு, அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது.
இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை லாக்டவுன் காலத்தில் நகரச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்கும் என்பதால், இந்தக் காலக்கட்டத்தில் சாலை சீரமைப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளை விரைவாக மேற்கொள்ள மாநகராட்சி திட்டமிட்டு, பணிகளை நிறைவேற்றி வருகிறது.
சென்னை நகரம் முழுவதும் 1,656 சாலைகளில் (312கிமீ நீளம்) 213 கோடி மதிப்பிலான சாலை அமைக்கும் திட்டங்களை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது; சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 59 பேருந்து வழித்தடச் சாலைகள் சீரமைக்கப்படுகின்றன; TURIP திட்டத்தின் கீழ் 22 சாலைகள் சரி செய்யப்பட்டு வருகின்றன.
இதுமட்டுமின்றி, சிங்கார சென்னையின் கீழ் 622 உள் சாலைகளும், 307 கான்கிரீட் சாலைகளும், பேரிடர் நிவாரண நிதியில் 646 உள் சாலைகள் சீரமைக்கப்படுகின்றன.
இதுகுறித்து கூறிய மாநகராட்சி ஆணையர் கன்தீப் சிங் பேடி, “நாங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் என்பதால், சாலைகளை மறுசீரமைக்க இதுவே சிறந்த நேரம், அதனால் சாலைகள் சீரமைப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது என்றார். மேலும், சாலை போடும் பணியில் ஏதேனும் முறைகேடுகள் நடைபெறாதவாறு, இரவு நேரங்களில் பணிகளை கண்காணிக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றும், மாநகராட்சி, அதன் துணை கமிஷனர் (பணிகள்) மற்றும் அதன் மண்டல துணை கமிஷனர்களிடம் அதற்கான பணிகள் ஒப்படைக்கப்பட்டு உள்ளது என்றார்.
இதையடுத்து சென்னையில் சாலை சீரமைக்கும் பணியை நள்ளிரவு நேரில் சென்று ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார். ஜனவரி மாத இறுதிக்குள் சாலை சீரமைப்பு பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்