சென்னை:
நீட் விவகாரத்தில் தமிழக ஆளுநருக்கு கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “உச்சநீதிமன்றம் இன்று வழங்கியிருக்கிற தீர்ப்பு தமிழகத்தில் சமூகநீதிக்காக போராடுகிறவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுகிற போராட்டத்திலும் திரு @mkstalin தலைமையிலான தமிழக அரசு நிச்சயம் வெற்றி பெறுகிற சூழல் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் தமிழக ஆளுநர் தற்காலிகமாக முடக்கி வைக்கலாம்.

ஆனால், தமிழக அமைச்சரவையின் அறிவுரையின்படிதான் தமிழக ஆளுநர் செயல்பட வேண்டும். அதற்குப் புறம்பாக அவர் செயல்படுவாரேயானால், அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படுவதாகவே கருத வேண்டியிருக்கும். இந்த நிலைக்கு தமிழக ஆளுநர் தம்மை உட்படுத்திக் கொள்ள மாட்டார் என்று நம்புகிறோம்.

அதையும் மீறி, தமிழக மக்களுக்கு விரோதமாக ஆளுநர் செயல்படுவாரேயானால் அதற்குரிய விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.