ஜோர்காத், அசாம்

புல்லிபாய் செயலி விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நீரஜ் பிஷ்னோய் குற்றமற்றவர் என அவர் தந்தை தெரிவித்துள்ளார்.

பல பிரபலமான பெண்கள், மாணவிகள் உள்ளிட்டோரின் புகைப்படங்களை அவர்களுக்குத் தெரியாமல் பதிவிட்டு தவறாகப் பதிந்த புல்லிபாய் செயலியின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.    இந்த செயலியின் முக்கிய புள்ளியாக செயல்பட்டதாக அசாமில் வசிக்கும் நீரஜ் பிஷ்னோய் என்னும் 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.   இவர் கல்வி பயின்று வந்த போபால் விஐடி இவரை இடைநீக்கம் செய்துள்ளது.

நீரஜ் கைது குறித்து அவருடைய தந்தை தடரத் பிஷ்னோய், “எனது மகன் நீரஜ் நாள் முழுவதும் அவருடைய மடிக்கணினியில் ஏதாவது செய்து கொண்டிருப்பார்.  அவருக்கு இந்த மடிக்கணினி 10 ஆம் வகுப்பில் 86% மதிப்பெண்கள் பெற்றதற்காக அளிக்கப்பட்டது.   அவர் காவல்துறை சொல்வதைப் போல் அவர் எதுவும் செய்திருக்க வாய்ப்பில்லை.  அவர் குற்றமற்றவர் ஆவார்.

கடந்த புதன்கிழமை இரவு 11 மணிக்கு காவல்துறை அதிகாரிகள் எனது வீட்டுக்கு வந்து நீரஜ் இங்கு வசிக்கிறாரா எனக் கேட்டனர்.   நான் அவர்களை வீட்டுக்குள் வரச் சொன்னேன்.    அவர்கள் நீரஜை அழைத்து சென்றனர்.  நீரஜ் ஒரு வார்த்தை கூட பேசாமல் அவர்களுடன் சென்றார்.   நான் எனது கடின உழைப்பின் மூலம் எனது குழந்தைகளைக் கல்வி கற்கச் செய்கிறேன்.  என்னைப் பற்றித் தெரிந்த எனது மகன் அவ்வாறு நடக்க மாட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.