போபால்

புல்லிபாய் விவகாரத்தில் முக்கிய புள்ளியாகச் செயல்பட்டு கைதான நீரஜ் பிஷ்னோய் வி ஐ டி யில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

புல்லிபாய் என்னும் செயலி மூலம் பல பிரபல பெண்மணிகள், மாணவிகள் எனப் பலரின் புகைப்படங்கள் அவர்களுக்குத் தெரியாமல் இழிவான கருத்துக்களுடன் பதிவிடப்பட்டன.  இந்த  செயலியை நடத்தி வரும் முக்கியமான நபரான நீரஜ் பிஷ்னோய் என்பவர் இன்று டில்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சுமார் 21 வயது இளைஞரான நீரஜ் பிஷ்னோய் அசாம் மாநிலத்தில் வசிப்பவர் ஆவார்.  நீரஜ் போபாலில் உள்ள வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (விஐடி) யில் பிடெக் படித்து வருகிறார்.   இவரை அசாமில் கைது செய்த டில்லி காவல்துறையினர் இன்று டில்லிக்கு அழைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் போபால் விஐடி வெளியிடடுள்ள அறிக்கையில்,

“நமது கல்வி நிலையத்தில் 2020ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் பி டெக் படித்து வரும் நீரஜ் பிஷ்னோய் புல்லிபாய் செயலி தொடர்பாக டில்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். எனவே அவர் உடனடியாக அடுத்த அறிவிப்பு வரும் வரை இடை நீக்கம் செய்யப்படுகிறார்.  கல்வி நிலையத்தின் நற்பெயருக்கு அவர் களங்கம் ஏற்படுத்தியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது “

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.