ராய்ப்பூர்

நேற்று பஞ்சாபில் பிரதமர் மோடியின் வருகையின் போது நடந்த நிகழ்வுகள் குறித்து சத்தீஸ்கர் முதல்வர் பிரதமருக்குக் கேள்விக் கணைகள் தொடுத்துள்ளார்.

நேற்று பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி ஃபெரோஸ்பூரில் ஒரு பேரணியில் உரையாற்றத் திட்டமிட்டிருந்தார். அதையொட்டி அவர்  ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்லவிருந்தார்.  மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக அவர் சாலை வழியாகப் பயணம் செய்ய நேர்ந்தது.

வழியில் பிரதமர் மோடியின் வாகனங்களை விவசாயிகள் தடுத்ததனர்.  எனவே பிரதமர் மற்றும் அவரின் பாதுகாப்பு வாகனங்கள் மேம்பாலில் சுமார் 20 நிமிடங்கள் சிக்கின.  இதையொட்டி பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டது.    விமான நிலையத்துக்குத் திரும்பிய பிரதமர் மோடி தாம் உயிரோடு திரும்பியதற்குப் பஞ்சாப் முதல்வருக்கு நன்றி எனக் கூறினார்.

சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் பிரதமருக்கு  கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பூபேஷ் பாகல், “பிரதமர் மோடி தாம் உயிருடன் திரும்பியதற்குப் பஞ்சாப் முதல்வருக்கு நன்றி என அறிவித்துள்ளார்.  அவருடைய வாகனம் கல்லால் அடிக்கப்பட்டதா? அவருக்குக் கருப்புக் கொடி காட்டப்பட்டதா?  அப்படி எதுவும் நடக்காத போது அவர் இவ்வாறு அறிவிப்பது அரசியல் காரணங்களுக்காக ஆகும்.

இது பஞ்சாபில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் புகழைக் குலைக்கும் சதி ஆகும்.   மக்களால் தேர்வு செய்யப்பட்ட பஞ்சாப் அரசை மதிப்பிழக்கச் செய்யும் திட்டமாகும்.   இது எவ்வாறு நியாயமாகும்.  மோடி நிகழ்வு நடக்க இருந்த அரங்கத்தில் உள்ள இருக்கைகள் காலியாக இருந்ததால் அவர் அங்குப் போகவில்லை தானே?

ஒரு பிரதமராக இருந்து கொண்டு மோடி இவ்வளவு கீழ்த்தரமாக நடக்க கூடாது.   அவர் எவ்வாறு இவ்வளவு கீழிறங்கி தனது உயிர் காப்பாற்றப்பட்டது என பொய்யான அறிக்கை விடுகிறார்?   இது முழுக்க முழுக்க அரசியல் ஆதாயம் தேடும் அறிவிப்பாகும்.  ஒரு பிரதமர் இவ்வாறு உள்ளது துரதிருஷ்டவசமானது” எனத் தெரிவித்துள்ளார்.