விருதுநகர்
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் கைது செய்யப்பட்ட 4 பேர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வேலை வாங்கித் தருவதாக ரூ. 3 கோடி மோசடி செய்த வழக்கில் 20 நாட்களாகத் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று கர்நாடக மாநிலம் ஹாசனில் கைது செய்யப்பட்டார். அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக, கிருஷ்ணகிரி பாஜக மேற்கு மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன், அவரது உறவினர் நாகேசன், விருதுநகர் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப கழக மாவட்டச் செயலாளர் பாண்டிய ராஜன் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்து அழைத்து வந்தனர்.
நேற்று கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜியைத் தனிப்படை போலீசார் இரவு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்திய பின், இன்று காலை ஸ்ரீவில்லிப்புத்தூர் காவல் நிலையத்தில் முன்னிறுத்தப்பட்டார். தற்போது ராஜேந்திர பாலாஜி, 15 நாள் நீதிமன்ற காவலில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ராஜேந்திர பாலாஜிக்கு உதவியதாகக் கைதான 4 பேருக்கு ஜாமீன் கேட்டு, அவர்களின் வழக்கறிஞர்கள் விருதுநகர் குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு வந்தனர். கைதானவர்கள் மீது IBC 212 ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இது காவல்நிலைய ஜாமீனில் விட வாய்ப்புள்ள பிரிவு என்பதால், அவர்களுக்குப் ஜாமீன் வழங்கிய போலீசார் உத்தரவிட்டனர். அதையொட்டி அந்த நான்கு பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.