சென்னை
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஜவுளி மீதான ஜிஎஸ்டி உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு ஜவுளி ரகங்களுக்கான ஜி எஸ் டி வரியை 5%லிருந்து 12% ஆக உயர்த்தி உள்ளது. மேலும் ரூ.1000க்கு அதிகமான விலை உள்ள காலணிகளுக்கும் ஜிஎஸ்டி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அவ்வகையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில்,வேல்முருகன், “மோடி தலைமையிலான மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை மற்றும் லட்சம் கோடி அளவில் கடன் தள்ளுபடி அளித்துள்ளது. அதே வேளையில் மத்திய அரசு ஏழை எளிய மக்களை வஞ்சித்து வருகிறது. கோடிக்கணக்கில் கடனைச் செலுத்தாத 13 கார்ப்பரேட் நிறுவனங்களின் சொத்துக்களை தங்களுக்கு வேண்டிய தொழிலதிபர்களுக்குக் குறைந்த தொகையில் கைமாற்றி உள்ளது.
இவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களை ஏழை எளிய மக்களிடம் இருந்து வசூலிக்க மோடி அரசு ஜவுளி ரகங்கள் மீதான 5% ஜிஎஸ்டி வரியை 12% ஆக உயர்த்தி உள்ளது. ஏற்கனவே நூல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ள போது ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு உயர்த்தியது கண்டனத்துக்குரியது ஆகும். மத்திய அரசு இதற்கான நடவடிக்கையை எடுத்து ஜிஎஸ்டி வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.