சென்னை: தமிழக விவசாயிகளிடம் இருந்து நேரடி கரும்பு கொள்முதல் செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் ரேசன் கடைகளில் இலவச பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டு உள்ளது. இந்த தொகுப்புடன் முழுக்கரும்பும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக, கரும்பு விவசாயிகள், தங்களிடம் இருந்து அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

அதை ஏற்று, அரசே கரும்பு விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல் செய்யும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.

விவசாயிகளின் நலனை கருதி, பொங்கல் பண்டிக்கான கரும்பினை நேரடியாக விவசாயிகளிடம் இருந்தே கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கான விலை விவசாயிகளுக்கு உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும்.

எந்தெந்த நாளில் எத்தனை அட்டைகளுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறதோ, அதற்கேற்றவாறு படிப்படியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

கொள்முதல் செய்யப்படும் கரும்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் வரை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

கரும்பின் நுனியிலிருக்கும் தோகையை வெட்டாமல் முழுக்கரும்பையும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டும்.

இதில் எந்தவித புகார்களும் வருவதற்கு இடமளிக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.