தஞ்சாவூர்: தஞ்சை அருகே உள்ள சூரியனார்கோயில் ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் இன்று பரிபூரணமடைந்தார். அவருக்கு வயது  102.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே, பழைமை வாய்ந்த சூரியனார்கோயில் ஆதீன மடம் உள்ளது. இந்த மடத்தின் 27-வது சந்நிதானமாக அருளாட்சி புரிந்து வந்தவர்  ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமாச்சார்ய சுவாமிகள். வயது முதிர்வு காரணமாக, அவர் இன்று (03.01.2022) காலை 11 மணியளவில் பரிபூரணம் அடைந்தார்.

 ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள கோடங்குளம் கிராமத்தில் பிறந்தவர்.  இளமையிலேயே இறைவழிபாட்டில் நாட்டம் கொண்டு, திருவாவடுதுறை ஆதீனமடத்துக்கு வந்து துறவு பெற்றார். இந்த ஆதீனத்தில், மூத்த தம்பிரான் சுவாமிகளில் ஒருவராக இருந்து மெய்கண்டாரின் முக்தித் தலமான திருவெண்ணெய்நல்லூர் கிளை மடத்திலும், சிவஞான முனிவர் உறைந்த தலமாகிய காஞ்சிபுரம் கிளை மடத்திலும் சிறப்பாக சேவைபுரிந்தார்.

அதன்பின், திருவாவடுதுறை 23-வது சந்நிதானமாக இருந்த ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக பரமாசார்யா சுவாமிகளிடம் மந்திர கஷாயம் பெற்று சூரியனார்கோயில் மடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கே, ஆதீனகர்த்தர் தெய்வசிகாமணி தேசிக குருமூர்த்தி சுவாமிகள் சிவப்பேறு அடைந்ததையொட்டி, 27 -வதுபட்டம் பெற்று, முறைப்படி ஞானபீடத்தில் எழுந்தருளி 35 ஆண்டுகளுக்கு மேலாக ஆதீனகர்த்தராக அருளாட்சி செய்து வந்தார்.

சைவ சமய வளர்ச்சியிலும் ஆதீன மேன்மையிலும் ஆர்வம் கொண்டு தமது அருளாட்சிக் காலத்தில் பல்வேறு பணிகளை மடத்தில் மேற்கொண்டார். பழைமையான கோயில்களைப் புதுப்பித்துத் திருப்பணி செய்வதற்கு உறுதுணை யாக இருந்து வந்தார். 102 வயது முதிர்வு காரணமாக இன்று காலை 11 மணி அளவில் சுவாமிகள் பரிபூரணம் அடைந்தார்.