சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் நேரடி விசாரணையை ரத்து செய்து ஆன்லைன் விசாரணை ந்ட்க்கும் என அறிவித்துள்ளது.

நாடெங்கும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்ததால் கொரோனா தொற்றும் அதிகரித்துள்ளது.   எனவே பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.  அவ்வகையில் டில்லியில் உச்சநீதிமன்றத்தில் நேரடி விசாரணை ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் விசாரணை மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் நேரடி விசாரணை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.   அந்த அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.  மேலும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் அதிகரித்து வருவதால் இனி காணொலி காட்சி மூலம் மட்டுமே வழக்கு விசாரணைகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நேரடி மற்றும் கலப்பு விசாரணை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம், வழக்குகள் தாக்கல், உத்தரவு நகலுக்கான விண்ணப்பங்களையும் மின் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.  மிகவும் தவிர்க்க முடியாத நிலையில் மட்டும் நேரடியாக விண்ணப்பங்கள் செய்யலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.