சென்னை
தமிழக பள்ளிக் கல்வித்துறை 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வது குறித்து ஆலோசனை செய்து வருகிறது
தமிழக தனியார்ப் பள்ளிகள் 11 ஆம் வகுப்புக்கு உரிய முக்கியத்துவம் வழங்குவதில்லை. மாணவர்களை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயார் செய்வதிலேயே தீவிரம் காட்டுகின்றன. அதே வேளையில் உயர்கல்வி படிப்புக்கான நுழைவுத் தேர்வுகளில் பிளஸ் 1 பாடங்களில் இருந்தே அதிக கேள்விகள் கேட்கப்படுவதால் தமிழக மாணவர்கள் தேசிய நுழைவுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற முடியாத சூழல் நிலவுகிறது.
மேலும் தனியார் பள்ளிகள் இடையே நிலவும் போட்டி மனப்பான்மை மாணவர்கள், பெற்றோர்களுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. எனவே இவற்றைக் கருத்தில் கொண்டு பிளஸ் 1 வகுப்புக்குப் பொதுத்தேர்வு என்ற புதிய நடைமுறை, 2017-18-ம் கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், “தொடர்ந்து 10, 11, 12-ம் வகுப்பு என 3 ஆண்டுகள் பொதுத்தேர்வு எழுதுவதால் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. மேலும் நீட், ஜேஇஇ உ்ளளிட்ட தேசிய நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகவும் போதுமான அவகாசம் கிடைப்பதில்லை.
தவிர தமிழகம் தவிர்த்து, சிபிஎஸ்இ மற்றும் பிற மாநில கல்வி வாரியங்களின் பாடத்திட்டத்தில் 11ஆம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு முறை இல்லை. ஒரு சில காரணங்களால் பள்ளிகள் மாறும்போது மாணவர் சேர்க்கையிலும் குழப்பங்கள் நிலவுகின்றன. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, நடப்பு ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பொதுத்தேர்வை ரத்து செய்தாலும் தனியார்ப் பள்ளிகள் ஆதிக்கத்தைத் தவிர்க்க மாவட்ட அளவிலான தேர்வை முறைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பரிந்துரை அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.இது குறித்து முதல்வரின் அனுமதி கிடைத்தபின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.” எனத் தெரிவித்துள்ளனர்.