சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் செயல்பட்டு வரும் மாதிரிபள்ளி விடுதியில் தங்கியிருந்து நீட் தேர்வுக்கு படித்து வந்த மாணவர்கள் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சைதாப்பேட்டையில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஏராளமானோர் படித்து வருகின்றனர். இந்த வளாகத்தில் அரசு விடுதியும் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் அரசு மற்றும்அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கியிருந்து படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் நீட் பயிற்சி உள்பட பல்வேறு இலவச பயிற்கிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இங்கு தங்கியிருந்த சென்னை மேற்கு மாம்பலத்தைசேர்ந்த மாணவர் ஒருவர் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வீட்டுக்குச் சென்றுவிட்டு, மீண்டும் பயிற்சி மையத்துக்கு வந்து, விடுதியில் தங்கியுள்ளார். அவருக்கு சளி, காய்ச்சல் அறிகுறி இருந்துள்ளது. இதையடுத்து, அவருக்கு பரிசோதனைமேற்கொண்டதில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த விடுதியில் தங்கிப் படிக்கும் 71 மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதில், 24 மாணவர்கள், 10 மாணவிகள் என மொத்தம் 34பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும், சென்னை ஈஞ்சம்பாக்கத் தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் தனிமைப்படுத்தி, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, அந்தப் பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. மாணவ, மாணவிகளின் குடும்பத்தினருக்கும் பரிசோதனைமேற்கொள்ள நடவடிக்கைஎடுக்கப்பட்டு உள்ளது.
தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மாதிரிகளில் மரபணுமாற்றம் கண்டறியும் பரிசோதனையும் நடந்து வருகிறது. தற்போது மாணவ, மாணவிகள் அனைவரும் நலமுடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.