மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தியாவில் முதல் ஒமிக்ரான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அது மாரடைப்பால் ஏற்பட்ட உயிரிழப்பு என்று மறுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வெளியிடப்படும் மாறுபட்ட தகவல்களால் பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதனால் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த மத்தியஅரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால், பல மாநில அரசுகள், பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என கூறி, கட்டுப்பாடுகளை விதிப்பதில் மெத்தனம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8 மணி வரையிலான பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள தகவலில், நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1270 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 374 பேர் குணமடைந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதிகபட்ச பாதிப்பு, மகாராஷ்டி மாநிலத்தில் காணப்படுகிறது. அங்கு இதுவரை 450 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்ட நிலையில், 125 பேர் குணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஒமிக்ரான் பாதிப்புக்குள்ளானவர்களில் 46% சதவிகிதம் பேர் எந்த வெளிநாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளாதவர்கள் என தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், அங்கு மருத்துவமனையில் சிஒமிக்ரான் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது.மகாராஷ்டிர மாநிலம் பிம்பிரி சின்வாட் பகுதியைச் சேர்ந்த 52 வயதாகும் நபர் ஓமைக்ரானால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக முதலில் மருத்துவமனை தகவல் வெளியானது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த நபர் ஒமிக்ரானால் இறக்கவில்லை, மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்துள்ளார் என்று அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
உயிரிழந்ததாக கூறப்படும் நபர், நைஜீரியாவில் இருந்து நாடு திரும்பியவர் என்றும், அவருக்கு எடுக்கப்பட்ட சோதனையில் ஒமிக்ரான் பாதிப்பு உறுதியானதால், அங்குள்ள ஒய்.பி.சவான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு ஏற்கனவே சர்க்கரை வியாதியும் இருந்ததாகவும், இந்த நிலையில்தான் அவர் உயிரிழந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
உயிரிழந்த நபர் ஒமிக்ரான் தொற்று காரணமாகவே உயிரிழந்துள்ளதாக அந்த மருத்துவமனை ஊழியர்கள் கூறி வரும் நிலையில், மாநில சுகாதாரத்துறையோ, அவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்தார் என்று தெரிவித்து உள்ளது. மாறுபட்ட தகவல்களால் பொதுமக்கள் குழம்பிப்போய் உள்ளனர்.