சென்னை: தமிழ்நாட்டில் ஒமிக்ரான பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில்  இனி வழக்கமான முறையில் நேரடி விசாரணை மட்டுமே நடைபெறும் என  உயர் நீதிமன்ற  தலைமை பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால், நீதிமன்ற பணிகளும் ஆன்லைனுக்கு மாறியது. பல முக்கிய வழக்குகளின் விசாரணைகளும் ஆன்லைன் மூலமே நடைபெற்றது. பின்னர் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டதால் வழக்குகள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் நடந்து வருகிறது.

இந்தநிலையில், 2022ம் ஆண்டு ஜனவரி 3ந்தேதி முதல் சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் மதுரை கிளையில்,  ஆன்லைன் விசாரணை கிடையாது , நேரடி விசாரணைகள் மட்டுமே நடைபெறும்  என உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பி.தனபால் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஒமிக்ரான் பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் நேரடி விசாரணை நடைபெறும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.