டெல்லி: கொரோனா தொற்று காலத்தில் மாணாக்கர்களின் கல்வி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாடத்திட்டங்களை குறைக்க திட்டமிட்டு இருப்பதாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தெரிவித்து உள்ளது. ஏற்கனவே மாணவர்களின் கல்வி சுமையை குறைக்கும் வகையில், என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டங்களை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அனைத்து வகையான பாடத்திட்டங்களை குறைக்கவும் முடிவு செய்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக மாணாக்கர்களின் கல்வி பாதிக்கப்பட்டு, அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கடந்த செப்டம்பர் மாதம்தான் பள்ளிகள் பரவலாக திறக்கப்பட்ட நிலையில், தற்போது பரவி வரும் ஒமிக்ரான தொற்று, மீண்டும் கல்வி நிலையங்களை மூட வைத்துவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
மாணாக்கர்களுக்கு நேரடி கல்வி போதிக்காமல் ஆன்லைன் கல்வி போதிக்கப்படுவதால், அவர்களின் கல்வித்திறனில் வளர்ச்சி காணப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு, கொரோனா தொற்று காரணமாக சுமார் 40 சதவிகிதம் அளவிலான பாடத்திட்டங்களை குறைத்துக்கொள்ள என்சிஆர்டி அனுமதி வழங்கிய நிலையில், தற்போது பாடப்புத்தங்களில் உள்ளடகத்தை குறைக்க திட்டமிடப்பட்டு வருவதாக தெரிவித்து உள்ளது.
என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட இருப்பதாகவும், மாணவர்களின் கல்விச் சுமையை, 50 சதவீதம் வரை குறைக்க திட்டமிடப்பட்டு வருவதுடன் பாடப்புத்தங்களில் உள்ளடகத்தை குறைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிகிறது.