அரியலூர்: பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்து வரும் விவகாரம் பூதாகரமாக கிளம்பியுள்ள நிலையில், 10ம்வகுப்பு மாணவனுக்கு ஆசிரியை ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் அதிர்ச்சியை அளித்துள்ளது. இது தொடர்பாக ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
டிஜிட்டல் தளத்தின் அசாத்திய வளர்ச்சி ஒருபுறம் முன்னேற்றத்தை கொடுத்தாலும், மற்றொரு புறம் அழிவையும், கலாச்சார சீர்கேடுகளுக்கும் காரணமாகி வருகிறது. சமீப காலமாக நாடு முழுவதும் பாலியல் தொல்லைகள், கொலைகள் அதிகரித்து வருகின்றன. பச்சிளங் குழந்தைகள் முதல், பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள், கொலை, கொள்ளை, கள்ளக்காதல், கற்பழிப்பு போன்ற சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக பள்ளி மாணவிகள் மீதான பாலியல் புகார்கள் வேகமெடுத்து வருகின்றன. ஏற்கனபே பல ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு பயிற்சியாளர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மாணவனுக்கு ஆசிரியை ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் அருகே 10ம் வகுப்பு மாணவனுக்கு காதல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியை குறித்து அந்த மாணவன் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவனது பெற்றோர் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதுகுறித்து விசாரித்த காவல்துறையினர் அநத ஆசிரியையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.