சென்னை: சென்னையில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. சென்ட்ரல் அருகே உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும், 7 பயிற்சி டாக்டர்கள், நர்ஸ்கள் உள்பட 42 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அவர்களுக்கு எடுக்கப்பட்ட சோதனையில் ஒமிக்ரான் அறிகுறி இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஒமிக்ரான் தொற்று பரவி வருகிறது. இதுவரை மொத்தம் 33 பேருக்கு ஒமிக்ரான் உறுதியான நிலையில், அவர்களில் 16 பேர் குணமடைந்து உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 24 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 16 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 8 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதற்கிடையில், ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் கடந்த ஒரே வாரத்தில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 7 பயிற்சி டாக்டர்கள் உள்பட 42 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 17-ந்தேதி கொரோனா நோயாளி ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த வார்டில் பணியாற்றிய மருத்துவர்கள், நர்சுகள், பயிற்சி மருத்துவர்கள், நர்சிங் மாணவர்கள், ஊழியர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அந்த வளாகத்தில் பணியாற்றிய 68 பயிற்சி டாக்டர்கள், 227 நர்சிங் மாணவிகள், 60 துப்புரவு பணியாளர்கள் உள்பட 3 ஆயிரத்து 370 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதில், 7 பயிற்சி டாக்டர்கள், 7 நர்சிங் மாணவர்கள், 3 நர்சுகள், 1 முதுகலை மருத்துவ படிப்பு மாணவர், 1 துப்புரவு பணியாளர்கள், அந்த கட்டிடத்தில் சிகிச்சை பெற்ற 23 நோயாளிகள் என மொத்தம் 42 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி (எஸ் ஜீன்) தென்பட்டுள்ளது. இதையடுத்து இந்த 42 பேரின் சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக புனே மற்றும் ஐதரபாத்தில் உள்ள ஆய்வகங்களுக்கு மரபணு பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.