தென்காசி
ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க 4 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் பாதிப்பு உலகெங்கும் பரவி வருகிறது. இந்தியாவில் இந்த பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதையொட்டி மாநில அரசுகளை எச்சரிக்கையுடன் இருக்குமாறும் தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் விதிக்கவும் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
இதையொட்டி பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமலாகி உள்ளது. குறிப்பாக தற்போது புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் மக்கள் ஒரே இடத்தில் கூட வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் பரவல் மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் எழுந்துள்ளதால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
வழக்கமாகக் குற்றாலம் அருவிகளில் வருடப் பிறப்பு மற்றும் விடுமுறையையொட்டி ஏராளமானோர் வந்து குளிப்பார்கள். இதனால் ஒமிக்ரான் பாதிப்பு ஏற்படலாம் என்னும் அச்சத்தில் தென்காசி மாவட்ட நிர்வாகம் டிசம்பர் 31 முதல் ஜனவரி 2 வரை குற்றால அருவிகளில் குளிக்கத் தடை விதித்து உத்தரவு இட்டுள்ளது.