சென்னை
கல்வி ஆண்டு இடையில் பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு மறு நியமனம் கோர உரிமை இல்லை எனச் சென்னை உயர்நீதிமன்றம் கூறி உள்ளது.
தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்றி,கல்வியாண்டின் மத்தியில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள், தங்களைக் கல்வி ஆண்டு முடியும்வரை மறு நியமனம் செய்யக் கோரி அளித்த விண்ணப்பத்தை நிராகரித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அரசின் இந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியர்கள் சிலர் தொடர்ந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த தனி நீதிபதி,அவ்வாறு பணி ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்குக் கல்வி ஆண்டு முடியும் வரை மறு நியமனம் வழங்க வேண்டும் என்று உத்தர விட்டிருந்தார்.
தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் சார்பில் தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நேற்று இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.
அரசு தரப்பில், ‘‘சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் உபரி ஆசிரியர்கள் மாவட்டத்தில் இருப்பதால், பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் சேவை தேவையில்லை என்பதால் அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அரசி உபரி ஆசிரியர்களின் நியமனம் தொடர்பாகக் கொள்கை முடிவெடுத்துள்ளது’’ என்று வாதிடப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், ‘‘கடந்த 2018 ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் கல்வியாண்டின் மத்தியில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு, கல்வியாண்டின் இறுதிவரை மறு நியமனம் வழங்குவது, உபரி ஆசிரியர்கள் இருந்தால், ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு மறு நியமனம் வழங்க முடியாது எனக் கூறப்பட்டுள்ளது.
ஆகவே, கல்வியாண்டின் மத்தியில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்குக் கல்வியாண்டின் இறுதிவரை மறு நியமனம் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை நாங்கள் ரத்து செய்கிறோம், மேலும் உபரி ஆசிரியர்கள் இருந்தால், கல்வியாண்டின் மத்தியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு மறுநியமனம் கோர எந்த உரிமையும் இல்லை என ஏற்கெனவே ஒருவழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது’’ என உத்தரவிட்டுள்ளனர்.