ஐதராபாத்: தெலங்கானா- சத்தீஸ்கர் மாநில எல்லையில் நடைபெற்ற வேட்டையில், 4 பெண்கள் உள்பட 6 மாவோயிஸ்டுகள் என்கவுண்டர் செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சில வடமாநிலங்கள் உள்பட ஆந்திரா, தெலுங்கான மற்றும் கேரள மாநிலத்திலும் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களை வேட்டையாடும் பணியில், பாதுகாப்பு படையினர் சிஆர்பிஎஃப் வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், தெலங்கானா- சத்தீஸ்கர் மாநில எல்லைப் பகுதியான சுக்மா மாவட்டத்தில் உள்ள கிறிஸ்டராம் என்ற பகுதியில் மாவோயிஸ்டுகளின் ஒரு குழு தடஙகி இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்  காலை 7 மணியளவில் வனப்பகுதியில் சத்தீஸ்கர் காவல் துறையினரும்,  சிஆர்பிஎஃப் வீரர்களும் அந்த பகுதியை சுற்றி வளைத்து  தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாவோயிஸ்டுகள், காவல்துறையினர்மீது துப்பாக்கி சூடு நடத்தி தப்பிக்க முயன்றனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இதில்,  மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளில், சார்லா பகுதியின் மாவோயிஸ்ட் அமைப்பின் கமாண்டர் மது, மேலும் ஒரு ஆண் மாவோயிஸ்டு மற்றும் 4 பெண் மாவோயிஸ்டுகளும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள்  ஆறு பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக  தெலங்கானா காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களிடமிருந்து ஆயுதங்களையும், பயங்கரமான வெடிபொருட்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.