சென்னை: வடசென்னையைச் சேர்ந்த திருவொற்றியூர் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த குடிசை மாற்று வாரிய அடீக்கு மாடி குடியிருப்புக் கட்டடம் இன்று காலை திடீரென இடிந்து விழுந்தது. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருவொற்றியூரில் அரிவாக்குளம் பகுதியில் 24 வீடுகள் கொண்ட 4 அடுக்கு மாடி குடிசை மாற்று வாரிய குடியிருப்புக் கட்டடம் அமைந்துள்ளது. இந்த குடியிருப்புகள் கடந்த 23ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த அடுக்கு மாடி குடியிருப்புகள், சேதமடைந்து இருப்பதால், அங்கு வசித்தவர்கள், ஏற்கனவே அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, மாற்றுபகுதியில் தங்கஅறிவுறுத்தப்பட்டிருந்தனர். இருந்தாலும் சிலர் அங்கேயே வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த குடியிருப்புகளில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று இரவு பயங்கர சத்தத்துடன் திடீரென விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு வசித்து வந்த சிலரும், மூட்டை முடிச்சுகளுடன் இரவோடு இரவாக வீட்டை விட்டு வெளியேறினர். அதைத்தொடர்ந்து, குடியிருப்பில் ஏற்பட்ட விரிசல் கொஞ்சம் கொஞ்சமாக அதிகாக இன்று காலை திடீரென மொத்தமாக இடிந்து விழுந்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினரும், குடிசை மாற்று வாரிய அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்ததுடன், விசாரணை நடத்தினர். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து முன்கூட்டியே மக்கள் வெளியேறியதால், உயிர்ச்சேதம் தவிர்ப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இருந்தாலும், இடிபாடு களில் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என்று காவல் துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த குடியிருப்புக் கட்டடம் இடிந்து தரைமட்டமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.