சென்னை: ஆயுர்வேதா, சித்தா, யுனானி மற்றும் ஓமியோபதி படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் நாளை (28ந்தேதி) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவக் கல்லுாரிகளில், ஆயுர்வேதா, சித்தா, யுனானி, ஓமியோபதி மருத்துவ பட்டப் படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேல்நிலைப் பள்ளி தேர்வில் அறிவியல், ஆங்கிலப் பாடங்கள் எடுத்து தேர்ச்சி பெற்று, ‘நீட்’ தேர்வில் வெற்றிபெற்றவர்கள், அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனித்தனியாக, www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் 28ம் தேதி காலை 10:00 மணியில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். ஜனவரி 18 விண்ணப்பத்தை பதிவிறக்கம்செய்ய கடைசி நாள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களையும், ஜனவரி 18 மாலை 5:30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இதுகுறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள ஆயுர்வேதா, சித்தா, யுனானி மற்றும் ஓமியோபதி (பி.ஏ.எம்.எஸ்/ பி.எஸ்.எம்.எஸ்/ பி.யு.எம்.எஸ்/ பி.எச்.எம்.எஸ்) இளநிலை மருத்துவப்படிப்பில் 2021-2022ஆம் கல்வியாண்டில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் நாளை காலை 10 மணி முதல் ஜனவரி 18-ம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து, 18-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
12ஆம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான தேர்வில் (அறிவியல் பாடங்கள் மற்றும் ஆங்கிலம் எடுத்து) தேர்ச்சிப் பெற்று மற்றும் 2021 மருத்துவப் படிப்பிற்கான தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வினை (NEET U.G-2021) எழுதி தேவையான தகுதி மதிப்பெண் பெற்றவர்கள் இந்தப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை (முறையே அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு தனித்தனியாக) www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம், தகுதி, மேற்கண்டப் படிப்புகளுக்கான அரசு மற்றும் சுயநிதி இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் கலந்தாய்வின் போது நடைமுறையில் உள்ள இனசுழற்சி விதிமுறைகள் பின்பற்றப்படும்’ என தெரிவித்துள்ளார்.
மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள, இரண்டு சுயநிதி ஓமியோபதி மருத்துவக் கல்லுாரிகளில், எம்.டி., ஓமியோபதி மருத்துவப் படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஓமியோபதி மருத்துவத்திற்கான நுழைவுத் தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தை, www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.