சென்னை
ரயில்வே பாலத்தில் ஏற்பட்ட விரிசல் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததால் இன்று முதல் அரக்கோணம் – காட்பாடி தடத்தில் மீண்டும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
கடந்த 23 ஆம் தேதி அரக்கோணம் – காட்பாடி தடத்தில் திருவலம் – முகுந்தராயபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில்வே பாலத்தில் விரிசல் இருப்பது கண்டறியப்பட்டது. இதையொட்டி கடந்த 3 நாட்களாகப் பெங்களூரு, கோயம்புத்தூர் உட்பட பல்வேறு இடங்களுக்கு இந்த வழித்தடத்தில் செல்ல வேண்டிய 70-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.
பாலத்தைச் சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.கடந்த 3 நாட்களாக முழு வீச்சில் நடந்த சீரமைப்பு பணி நேற்று மாலை நிறைவடைந்தது. பிறகு, ரயில் இன்ஜினை இயக்கி ஆய்வு நடத்தப்பட்டது. இன்று முதல் இத்தடத்தில் வழக்கம் போல ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
தெற்கு ரயில்வே, ”இதுவரை ரத்து செய்யப்பட்ட 70-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களுக்கான கட்டணத் தொகை எந்த பிடித்தமும் இன்றி பயணிகளுக்குத் திருப்பி அளிக்கப்படும். இதில் ஐஆர்சிடிசி இணையதளத்தில் முன்பதிவு செய்தவர்களின் வங்கிக் கணக்குக்குக் கட்டண தொகை அடுத்த சில நாட்களில் வந்துவிடும். முன்பதிவு மையங்களில் முன்பதிவு செய்தவர்கள் அருகே உள்ள மையங்களில் டிக்கெட்டை காண்பித்து கட்டணத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம்.” என அறிவித்துள்ளது.