சென்னை
தனது ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் ரூ.500 ஊதிய உயர்வு அளித்துள்ளது.
தமிழகத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றது. இதில் 6,761 மேற்பார்வையாளர்கள், 15,090 விற்பனையாளர்கள் மற்றும் 3,158 உதவி விற்பனையாளர்கள் என மொத்தம் 25,009 பேர் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். சட்டப்பேரவையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாத ஊதியம் ரூ.500 அதிகரித்து வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு வெளியிட்டார்.
இதையொட்டி உயர்த்தப்பட்ட ஊதியம் ஏப்ரல் 1ம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்தது. தற்போது கடை மேற்பார்வையாளர்களின் ஊதியம் ரூ.12,750ல் இருந்து ரூ.13,250 ஆகவும், விற்பனையாளர்களின் ஊதியம் ரூ.10,600ல் இருந்து ரூ.11,100 ஆகவும், உதவி விற்பனையாளர்களின் ஊதியம் ரூ.9,500ல் இருந்து ரூ.10,000 ஆகவும் உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இவ்வாறு உயர்த்தப்பட்ட சம்பளப் பட்டியலின் விவரங்களை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் கடை மேற்பார்வையாளர்களுக்கு உயர்த்தப்பட்ட தொகையில் விபத்து காயம், மருத்துவ காப்பீடு, குடும்ப நல நிதிக்கு என பிடித்தங்கள் போக ரூ.11,400ம், விற்பனையாளர்களுக்கு பிடித்தங்கள் போக ரூ.9,508ம், உதவி விற்பனை யாளர்களுக்கு பிடித்தங்கள் போக ரூ.8540ம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.