சென்னை: பத்திரப்பதிவில் மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை வழங்கும் நடைமுறை ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
பதிவுத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக பல சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக இணையதளம் மூலம் பதிவு செய்து, ஒன்றன் பின் ஒருவராக பதிவு செய்யும் வகையில் ஒதுக்கீடு நடைபெற்று வருகிறது. இதனால், வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாடு தவிர்க்கப்படுகிறது. சாதாரண மக்களும் குறிப்பிட்ட நேரத்தில் பத்திரப்பதிவு செய்து வருகின்றனர். ஆனால், இந்த நடவடிக்கையால், மூத்த குடிமக்கள் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்கும் பொருட்டு, தற்போது சில திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன.
மூத்த குடிமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இனி வரும் காலத்தில் எழுதிக்கொடுப்பவர் அல்லது எழுதி வாங்குபவரில் யாரேனும் ஒருவர் எழுபது (70) வயதைக் கடந்தவராக இருக்கும் பட்சத்தில் அவர்கள் தங்களின் வரிசை எண்ணுக்காக காத்திருக்காமல் அலுவலகம் வந்தவுடன் உடனடியாக பதிவு செய்யும் வண்ணம் மென்பொருளில் உரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான பதிவுகளை ஆதார் அடையாள அட்டை அல்லது உரிய அடையாள அட்டையின் உதவியுடன் வயது சரிபார்த்து, அவர்கள் 70வயதுக்கு மேற்பட்டவராக இருப்பின், பதிவு நாளன்று அவர்களுக்கு எந்த வரிசையில் டோக்கன் செய்திருந்தாலும் அவர்கள் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்த உடனேயே, பத்திரப்பதிவை செய்ய அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து உடனடியாக ஆவணம் பதிவு செய்யப்படும்.
இந்த அறிவிப்பு எதிர்வரும் 01.01.2022 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.