சென்னை: தந்தை பெரியாரின் 48வது நினைவு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவரது உருவப்படத்துடக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
இவர் சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர். பெரியார் என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள் செப்டம்பர் 17, 1879-ம் ஆண்டு ஈரோட்டில் பிறந்தார். 1973ம் ஆண்டு டிசம்பர் 24ந்தேதி அன்று மறைந்தார். இன்று அவரது 48வது நினைவு தினம். இதையொட்டி தமிழகம் முழுவதும் அவரது உருவ சிலைகள் மற்றும் உருவப்படத்துக்கு மரியா செய்யப்பட்டு வருகிறது.
சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செய்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், செந்தில் பாலாஜி , எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ள டிவிட்டில், ஈராயிரம் ஆண்டுகள் அடக்கப்பட்ட இனத்தின் மான உணர்ச்சியைத் தட்டியெழுப்பி, சுயமரியாதை ஒன்றே அடிமை விலங்கைத் தகர்த்தெறியும் வழி எனத் தொண்டாற்றிய தந்தை பெரியாரின் நினைவுநாளில், ஆதிக்கச் சக்திகளின் சூழ்ச்சிகளை வென்று திராவிடக் கொள்கைகள் கொண்டு தமிழர் மானம் காக்கச் சூளுரைப்போம்!” என தெரிவித்துள்ளார்