கொல்கத்தா
மேற்கு வங்க மாநில போக்குவரத்து அமைச்சர் பிர்கத் ஹக்கிம் கொல்கத்தா நகர மேயராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 19 ஆம் தேதி மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தா மாநகராட்சி தேர்தல் நடந்தது. கொல்கத்தாவில் 4,949 வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகள் கடந்த 21 ஆம் தேதி எண்ணப்பட்டது. கொல்கத்தா மாநகராட்சியை மூன்றாம் முறையாக திருணாமுல் காங்கிரஸ் கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை படைத்தது.
கொல்கத்தாவில் மொத்தமுள்ள 144 வார்டுகளில் 72% வாக்குகளைப் பெற்ற திருணாமுல் 134 இடங்களைப் பிடித்துள்ளது. மேற்கு வங்க மாநில போக்குவரத்து அமைச்சரான பிர்கத் ஹக்கிம் கொல்கத்தா மேயராக பதவி ஏற்பார் என சொல்லப்பட்டது. ஆனால் அதற்கு திருணாமுல் காங்கிரஸில் எதிர்ப்பு கிளம்பியது.
மம்தாவின் உறவினரும் கட்சி பொதுச் செயலருமான அபிஷேக் பானர்ஜி கட்சியில் ஒருவருக்கு ஒரே பதவி என்னும் திட்டத்தை அமல்படுத்த முயல்கிறார். ஆகவே கொல்கத்தா மேயராக பிர்கத் ஹக்கீம் நியமிக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது பிர்கத் ஹக்கீம் கொல்கத்தா நகர மேயராகவும் அதின் கோஷ் துணை மேயராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இதில் தலையிட்டு ஹக்கீமை கொல்கத்தா மேயராக நியமித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.