சென்னை: மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் செய்வது தொடர்பான வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், மசாஜ் பார்லர்களில்  சிசிடிவி பொருத்த சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

சென்னை உள்பட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் மசாஜ் சென்டர்கள், ஸ்பா, ஆயுர்வேத சிகிச்சை மையங்கள் போன்றவை  அதிகரித்து வருகின்றன. மசாஜ் என்ற போர்வையில்,  சில பார்லர்களில்  பாலியல் தொழில் நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. இதையடுத்து பல மசாஜ் மையங்களில் அதிரடி ரெய்டுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

நேற்றுகூட சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் ஸ்பா என்ற பெயரில் செயல்பட்டு மசாஜ் நிறுவனத்தில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால், மசாஜ் சென்டர்களில் அத்துமீறி காவல்துறையினர் நடந்துகொள்வதாக கூறி கிரிஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், சென்னையில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் சட்ட ரீதியான செயல்பாட்டில்  காவல்துறை தலையிடுவ தாகவும், இதில் காவல்துறை தலையிடக்கூடாது என உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு விசாரணைகளைத் தொடர்ந்து, காவல்துறையின் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிப்பது சட்ட விரோதமானது என்று கூறியதுடன், காவல்துறை நடவடிக்கையை தடுப்பது  குற்றங்கள் அதிகரிக்கக் காரணமாகும், ஊக்குவிப்பதாகவும் அமைந்துவிடும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும்,  தமிழகத்தில் ஸ்பாக்கள், மசாஜ் சென்டர்களில் சிசிடிவி பொருத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.