ஈரோடு: ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பேரூராட்சி உதவி பொறியாளர் மேஜைகளுக்கு அடிப்பகுதியில் கட்டுக்கட்டாக லஞ்சப் பணம் இருந்தது பறிமுதல் செய்யப்பட்டது. கணக்கில் காட்டப்படாத 50 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம், ஓழல் புறையோடிப்போய் உள்ளது. இதை தடுக்க பல முயற்சிகள் எடுத்தும், முழுமையாக தடுக்க முடியாமல் மத்திய மாநில அரசுகள் திண்டாடி வருகின்றன. இந்த நிலையில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எதற்கெடுத்தா லும் லஞ்சம் கேட்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், நேற்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக, பேரூராட்சி அலுவலகம் செயல்பட்டு வரும் 3வது தளத்தில் சாலை பணிகள், கட்டுமான பணிகள் திட்டமிடுதல் உள்ளிட்ட பணிகளுக் கான ஈரோடு மண்டல பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அங்கு உதவி செயற்பொறியாளர்களாக நாகராஜன், லீலாவதி ஆகியோர் உள்ளனர். இதன் மூலமாக சாலை பணிகள், கட்டுமான பணிகள் திட்டமிடுதல் உள்ளிட்ட பணிகள் செயல் படுத்தப்படுகிறது.
இந்த தளத்தில் தீவிரமான சோதனை நடத்தப்பட்டது. பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திற்குள் பணியில் இருந்த அனைத்து ஊழியர்களின் செல்போன்களை பெற்று கொண்டு தங்களது சோதனையை தொடங்கினர். அப்போது மேஜைகளுக்கு அடிப்பகுதியில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாறு கணக்கில் காட்டப்படாத 50 லட்ச ரூபாயை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அங்குள்ள அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.