சென்னை: தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பரவல் தொர்பாக, அனைத்த மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று காணொளி காட்சி மூலம் அவசர ஆலோசனை மேற்கொள்கிறார்.
தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா தொற்றின் பிறழ்வு வைரசான ஒமிக்ரான் தொற்று உலகின் பல நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவில் பரவத்தொடங்கி உள்ளது. இந்தியாவில் கடந்த 2ஆம் தேதி இந்த ஒமைக்ரான் தொற்று நுழைந்திருக்கிறது. தற்போது இந்த எண்ணிக்கை 225 ஆக உயர்ந்திருக்கிறது. இதையடுத்து ஒமிக்ரான் தொற்று பரவியுள்ள நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு ஒமிக்ரான் சோதனை மட்டுமின்றி 7 நாட்கள் தனிமை கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் உள்நாட்டில் இரவு ஊரடங்கு மற்றும் கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கவும் மத்தியஅரசு வலியுறுத்தி உள்ளது.
இந்த நிலையில் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு இன்று பகல் 12 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். அப்போது கிறிஸ்துமஸ் ,புத்தாண்டு, பொங்கல் பண்டிகையின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.