சென்னை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவின் உறவினரும், ஜெயா டிவி நிர்வாகியுமான விவேக் ஜெயராமனிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள கோடநாட்டில் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடந்தது. இந்த வழக்கின் விசாரணை ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் மேற்கொண்டு அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப் படாததால், தமிழக சட்டப்பேரவை தேர்தலின்போது, `கோடநாடு வழக்கை மறு விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்’ என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்
அதன்படி ஆட்சிக்கு வந்ததும், கோடநாடு கொலை கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடித்தது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர் பாக 5 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் சயானிடம் நீலகிரி எஸ்.பி ஆசிஷ் ராவத், குன்னூர் டி.எஸ்.பி சுரேஷ் உள்ளிட்டோர் 3 மணிநேரம் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி சில தகவல்கள் வெளியாயின. இதனால் அதிர்ச்சிக்குள்ளான எடப்பாடி, தன்னை இந்த வழக்கில் சிக்க வைக்க சதி நடப்பதாக கொந்தளித்தார். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே விசாரிக்கப்பட்ட சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து, கோடநாடு வழக்கு தொடர்பாக ஜெயா டிவியின் நிர்வாக அதிகாரியான, சசிகலாவின் அண்ணன் மகனும், இளவரசியின் மகனுமான விவேக் ஜெயராமனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோடநாடு பங்களாவில் தொடர்புடையவர் என்கிற அடைப்படையில் தனிப்படை போலீசார் கோவையில் வைத்து விவேக் ஜெயராமனிடம் விசாரணை நடத்துகின்றனர். விவேக் ஜெயராமனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்துகிறது. கோடநாடு பங்களா மேலாளரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்ட நிலையில் விவேக் ஜெயராமனிடம் விசாரணை நடைபெறுகிறது.