சென்னை: சட்ட விரோதமாக செயல்படும் சங்கங்களின் பதிவு ரத்து செய்வதற்கான வழிக்காட்டு நெறிமுறைகளை தமிழக பதிவுத்துறை  வெளியிட்டு உள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு பதிவுத்துறையின் தலைவர்  ம.ப.சிவன் அருள் அவர்கள், அனைத்து துணைப்பதிவுத்துறை தலைவர் மற்றும் அனைத்து மாவட்டப் பதிவாளர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதன்படி,  “தமிழ்நாடு சங்கங்களின் பதிவு சட்டம், 1975-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட பொழுதுபோக்கு சங்கங்கள்/மனமகிழ் மன்றங்கள் (Recreation Club) ஆகியவை காலமுறைப்படி மாவட்டப்பதிவாளர் (நிர்வாகம்) அல்லது சீட்டு மற்றும் சங்க சார்பதிவாளர்களால் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

இத்தகைய ஆய்வின்போது சங்கத்தின் செயல்பாடுகளில் சட்டவிரோதமான (illegal and unlawful activities) ஏதும் கண்டறியப்பட்டால் சங்கப்பதிவு சட்டம் பிரிவு 38ன் கீழ் உரிய வழிமுறைகளை பின்பற்றி சங்கப்பதிவினை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டம் 1975 பிரிவு 38ல் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனப்டி, பதிவுசெய்யப்பட்ட சமூகம் ஏதேனும் சட்ட விரோதமான செயலை மேற்கொள்வதாக பதிவாளருக்குத் தோன்றினால் அல்லது சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள எந்தவொரு வளாகத்திலும் சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்பட அனுமதித்தால்,பதிவாளர் அத்தகைய சமூகத்தின் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்தலாம்,மேலும் அத்தகைய ஒவ்வொரு விசாரணையைப் பொறுத்தமட்டில்,தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டம் 1975 பிரிவு 36 இன் துணைப் பிரிவுகள் (6), (7) மற்றும் (8) இல் குறிப்பிடப்பட்டுள்ள அதே அதிகாரங்களைப் பதிவாளர் கொண்டிருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.