சென்னை: தொலைதூர கல்வி மூலம் படிக்காமலேயே பட்டம் பெற முயன்ற 117 பேரின் தேர்வு முடிவுகளை சென்னை பல்கலைக்கழகம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

155 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியமும், பெருமையும் வாய்ந்த சென்னை பல்கலைக்கழகம் பல்வேறு பாடப் பிரிவுகளில் முதுகலைப் பட்டம், இளங்கலைப் பட்டம், பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளை தொலைதூரக்கல்வி மூலம் வழங்கி வருகிறது. தொலைதூரக்கல்வியையும் நடத்தி வருகிறது.  சுமார் ஒரு லட்சத்துக்கும்  மேற்பட்ட மாணவ-மாணவிகள் தொலைதூர கல்வி மூலம் படித்து வருகின்றனர். இதற்காக தமிழகம் மட்டு மின்றி பல்வேறு மாநிலங்களிலும் பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தொலைதூர கல்வி பயிற்சி மையங்கள் மூலம் பலர் முறைகேடாக பட்டம் பெறுவதாக புகார்கள் எழுந்தன. கடந்த இரு ஆண்டு களாக கொரோனா தொற்று பரவல் காரணமாக, ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட்டதால், அதை தங்களுக்கு சாகமாக்கி பலர் பட்டம் பெற முயன்றது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி தேர்வில் 1980 ஆம் ஆண்டு முதல் அரியர் வைத்துள்ளவர்கள் ஆன்லைன் தேர்வெழுத கடந்த 2020 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட வாய்ப்பை, எந்த பட்டப்படிப்பிலும் சேராமலேயே போலியான ஆவனங்கள் மூலம் பயிற்சி மையங்கள் மூலம் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வாறு தேர்வெழுதிய 117 பேரின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும், தொலைதூர கல்வி பயிற்சி மையங்கள் தலா ரூ.3 லட்சம் வரை பெற்றுக்கொண்டு இந்த மோசடிக்கு உதவியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்தமையங்கள் முடக்கப்பட்டு, அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  மேலும், இதுபோன்று வேறு யாரேனும் இதுபோன்ற மோசடி செயலில் ஈடுப்பட்டுள்ளர்களா? என்று கண்டுபிடிக்க விசாரணை குழுவை அமைத்து சென்னைப் பல்கலைக்கழக துணை வேந்தர் கெளரி உத்தரவிட்டுள்ளார்.