புதுச்சேரி
புதுச்சேரி கடற்கரையில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த புத்தாண்டு அன்று கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளதால் நாடெங்கும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று செய்தியாளர்களிடம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
முதல்வர் ரங்கசாமி, “இன்று மழை நிவாரணம் வழங்கும் பணியின் முதல் கட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அரசு ஊழியர்கள் நீங்கலாக மற்ற அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் இந்த நிவாரண உதவி வழங்கப்படும் பொங்கல் பண்டிகையின் போது பணத்துக்குப் பதில் இலவச வேட்டி சேலை அமுதசுரபி மூலம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து புத்தாண்டு கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தைப் புதுச்சேரி கடற்கரைச் சாலையில் நடத்தத் தடை கிடையாது. கொண்டாட்டங்கள் அனைத்தும் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.