டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள ரோகிணி மாவட்ட நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடித்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட டிஆர்டிஓ அதிகாரி, சிறையில் தற்கொலை முயற்சி செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்டுத்தி உள்ளது.

கடந்த 9ஆம் (டிசம்பர்) தேதி, டெல்லியில் உள்ள ரோகிணி மாவட்ட நீதிமன்றத்தில், குறைந்த சக்தி வாய்ந்த குண்டு ஒன்று நீதிமன்ற அறை 102ல் வெடித்தது. இதில் ஒருவர் காயமடைந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், பாரத் பூஷண் கட்டாரியா என்பவரை கடந்த 17ந்தி (வெள்ளிக்கிழமை) கைது செய்தனர். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவர் டிஆர்டிஓவில் (இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு) மூத்த விஞ்ஞானியாக இருந்து வருவது தெரிய வந்தது.
மேலும் விசாரணையில், அவரது வீட்டின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவருடனான மோதலில், அவரை தீர்த்துக்கட்டும் வகையில் திட்டமிட்டு, குண்டை வெடிக்கச் செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் வைக்கப்பட்டார். இந்த நிலையில், நேற்று அவர் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. அவரை உடனே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில், அவர் விஷம் அருந்தியிருந்ததுதெரிய வந்தது. உடனே அவருக்கு விஷமுறிவுக்கான மருந்து கொடுக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறத. தற்போது, பாரத் பூஷண் கட்டாரியா நலமாக இருப்பதாகவும், மேலும் விசாரணைக்கு பிறகே அவர் என்ன வகையான விஷத்தை உண்டார் என்பது தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்து உள்ளது.