புனே
ஒமிக்ரான் வைரசில் இருந்து பாதுகாக்கத் தடுப்பூசிகளை மாற்றி அமைக்க எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா பரிந்துரைத்துள்ளார்.
கடந்த மாதம் 24 ஆம் தேதி தென் ஆப்ரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் திரிபான ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. அந்த வைரஸ் வேகமாகப் பரவி தற்போது பல உலக நாடுகளில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையொட்டி அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள்,பிரிட்டன், கனடா உள்ளிட்ட பலநாடுகளில் தென் ஆப்ரிக்காவில் இருந்து வருவோருக்குத் தடை அல்லது கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன
பிரிட்டனில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. குறிப்பாகக் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அதிகபட்சமாக 93 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருக்கும் என அஞ்சப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பரில் பிரிட்டனில் டெல்டா வைரஸ் பரவலின் போது இதே நிலை இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா நேற்று புனேவில் செய்தியாளர்களிடம், “ஒமிக்ரான் பாதிப்பு பிரிட்டனில் அதிகரித்து வருவது கவலையை உண்டாக்கி உள்ளது. எந்த சூழலையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். கொரோனா தடுப்பூசிகள் மூலம் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை ஒமிக்ரான் வைரஸ் குறைத்து விடும் என கூறப்படுகிறது.
எனவே ஒமிக்ரான் வைரஸுக்கு ஏற்ப கொரோனா தடுப்பூசிகளை மாற்றி அமைக்க வேண்டும். இது குறித்து மேலும் அதிக புள்ளி விவரங்கள் தேவைப்படுகிறது. மற்ற நாடுகளில் ஒமிக்ரான் பரவலை நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஒமிக்ரான் வராமல் தடுக்க கொரோனா பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும்.” எனத் தெரிவித்துள்ளார்.