சிதம்பரம்: பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோவில் உள்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள சிவன் கோவில்கள் மற்றும் முருகன் கோவில்களில் ஆரூத்ரா தரிசனம் விழா இன்று சிறப்பாக நடைபெற்று வருகிறது.
கடவுள் சிவனின் நட்சத்திரம் திருவாதிரை. மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரமும், பவுர்ணமி தினமும் இணையும் நாளில் ஆருத்ரா தரிசனம் நாடு முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் நடத்தப்படுகிறது. இந்த தினத்தில் நடராஜருக்கு ஆறுவிதமான அபிஷேகங்களைச் செய்து அவரை குளிர்விப்பார்கள். இந்த நாளை ‘மார்கழி திருவாதிரை’ என்றும் அழைக்கப்படுகிறது.
தேரோட்டத்தை முன்னிட்டு 4 வீதிகளிலும் பெண்கள் கோலமிட்டு தேர்களை வரவேற்றனர். சிவனடியார்கள் மேளதாளங்கள் முழங்கவும், பல்வேறு இசை வாத்திய கருவிகளை இசைத்தபடியும் பக்தி கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.
தேரோட்டம் முடிந்த பின் தேரில் இருந்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் சாமிகள் இறக்கப்பட்டு, கோவிலுக்குள் ராஜசபை என அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு இரவு 8.30 மணி முதல் விடிய, விடிய லட்சார்ச்சனை நடந்தது.
இதையடுதுது விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் இன்று காலை (திங்கட்கிழமை) தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிகாலை 2 மணி முதல் ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்து, திருவாபரண அலங்கார காட்சி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை நடக்கிறது. தொடர்ந்து மதியம் 2 மணி அளவில் பஞ்ச மூர்த்திகள் கோவிலில் இருந்து 4 ரதவீதிகளிலும் வீதி உலா வந்த பிறகு, மாலை 3 மணி அளவில் ஆயிரங்கால் முகப்பு மண்டபம் முன்பு ஆருத்ரா தரிசன விழா நடைபெறும்.
அதாவது ஆயிரங்கால் மண்டபம் முன்பு நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் 3 முறை முன்னும், பின்னும் ஆடி பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார்கள். இதுவே ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது.
நாளை டிசம்பர் 21ம் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.
ஆரூத்ரா தரிசன விழாவையொட்டி சிதம்பரத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.