உத்தர பிரதேச மாநிலம் கோண்டா தொகுதி பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங் இவர் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராகவும் உள்ளார்.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மல்யுத்தப் போட்டியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் பிரிஜ் பூஷன் சரண் சிங்.

மேடையில் அமர்ந்திருந்த சிங்-கிடம் வந்த ஒரு வாலிபர் அவரிடம் ஏதோ கூற பதிலுக்கு அந்த வாலிபரை ரெண்டு அப்பு அப்பினார் பா.ஜ.க. எம்.பி.

இதுகுறித்து பின்னர் விளக்கமளித்த இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் துணைச் செயலாளர் வினோத் தோமர், “சம்பந்தப்பட்ட அந்த வாலிபர் உ.பி. மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் 15 வயதுக்கு அதிகமான வயதுடையவர் என்பதால் போட்டியில் இருந்து விளக்கப்பட்டவர்” என்று கூறினார்.

மேலும், “தன்னை போட்டியில் அனுமதிக்க வேண்டும் என மேடையேறி பிரிஜ் பூஷன் சரண் சிங்-கிடம் கோரிக்கை வைத்தார்” என்றும் கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் அந்த வாலிபரை பளார் பளார் என்று அறைந்த காட்சி விழாவில் கலந்து கொண்டவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த போட்டியில் கலந்து கொண்டவர்களில் 60 க்கும் மேற்பட்டோர் தவறான வயதை குறிப்பிட்டிருந்ததாக தகுதி நீக்கம் செய்யப்பட்டனர், பா.ஜ.க. எம்.பி. யிடம் அடிவாங்கிய அந்த வாலிபர் கோண்டா தொகுதியில் பிரிஜ் பூஷன் சரண் சிங் நடத்திவரும் மல்யுத்த பயிற்சிப் பள்ளியில் பயின்று வருவதாக கூறப்படுகிறது.

வெள்ளியன்று நடைபெற்ற இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலானது.