காற்றில் கரையக்கூடிய 30 க்கும் மேற்பட்ட ஏரோசால் ஸ்பிரே வகைகளில் கேன்சரை உருவாக்கும் பென்ஸின் அளவு அதிகமாக உள்ளது தெரியவந்ததால் அவற்றை அமெரிக்க சந்தையில் இருந்து திரும்பப் பெறுவதாக பி அண்ட் ஜி நிறுவனம் (Procter & Gamble – P & G) அறிவித்துள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் விற்பனை செய்யப்படும் எந்த ஒரு பொருளின் தரத்தையும் ஆய்வு செய்வதற்காக பல்வேறு தர நிறுவனங்கள் உள்ளபோதும், இவற்றை பரிசோதிக்க வாட்ச்-டாக் எனப்படும் கண்காணிப்பு குழுக்கள் தீவிரமாக செயல்பட்டுவருகின்றன.

அந்த வகையில் சமீபத்தில் பி அண்ட் ஜி நிறுவனம் பேன்டீன், ஓல்ட் ஸ்பைஸ் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் தயாரிக்கும் ஏரோசால் ஸ்பிரே வகைகளான உலர் ஷாம்பூ, உலர் கண்டீஷனர், பாடி ஸ்பிரே உள்ளிட்ட பொருட்களில் அதிகளவு நச்சுத் தன்மை இருப்பது தெரியவந்தது.

ஏரோசால் ஸ்பிரே கேன்களில் இருந்து திரவத்தை வெளியேற்றும் குழாய்களை ஆய்வு செய்ததில் அதில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலான அளவு பென்ஸின் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பென்ஸினை நுகர்வதாலும் வாய்வழியாக செல்வதாலும், தோல் மற்றும் சருமங்களில் ஏற்படுத்தும் விளைவுகளாலும் கேன்சர் உருவாக அதிக வாய்ப்பிருக்கிறது என்று நிபுணர்கள் எச்சரித்தனர்.

இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட கால கட்டத்தில் தயாரிக்கப்பட்ட இந்தப் பொருட்களை அமெரிக்கா முழுவதும் உள்ள கடைகளில் இருந்து திரும்ப பெற பி அண்ட் ஜி நிறுவனம் தாமாக முன்வந்து முடிவு செய்திருக்கிறது என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை (USFDA) அறிவித்துள்ளது.
ஏற்கனவே இந்த பொருட்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் அதனை பயன்படுத்த வேண்டாம் என்றும் தங்களது இணையத்தளம் மூலம் பதிவு செய்து உரிய இழப்பீடு பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.
[youtube-feed feed=1]