உலக பணக்காரர்கள் பட்டியலை ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது, இதில் சீனாவின் ஷாங் ஷன்ஷன் அதானியை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரும் பணக்காரரான அதானியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 11630 கோடி ரூபாய் சரிந்துள்ளது.
இதனால், 13 வது இடத்தில் இருந்த அதானி 14 வது இடத்திற்கு தள்ளப்பட்டார், ரூ. 5.9 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் சீனாவின் ஷாங் ஷன்ஷன் 13 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
12 வது இடத்தில் உள்ள முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ. 6.6 லட்சம் கோடி எனவும் அதானியின் சொத்து மதிப்பு ரூ. 5.8 லட்சம் கோடியெனவும் இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதானியை பின்னுக்குத் தள்ளிய சீனாவின் ஷாங் ஷன்ஷன் அந்நாட்டில் அதிகம் விற்பனையாகும் நோங்பூ குடிநீர் பாட்டில் உற்பத்தி நிறுவனத்தின் நிறுவனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பட்டியலில் அலிபாபா நிறுவன தலைவர் ஜாக் மா மற்றும் விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம்ஜி ஆகியோர் முறையே ரூ. 2.94 லட்சம் கோடி மற்றும் ரூ. 2.91 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 32 மற்றும் 33 வது இடத்தில் உள்ளனர்.