சென்னை: பூந்தமல்லி அருகே உள்ள செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர் களுக்கு வழங்கப்பட்ட உணவு பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 159 பேரில் 155 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும், 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் திருவள்ளுவர் கலெக்டர் கூறியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஃபாக்ஸ்கான் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 5000-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தங்குவதற்கு என பல இடங்களில்  தொழிற்சாலை நிர்வாகமே விடுதி அமைத்துக்கொடுத்துபராமரித்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை பூவிருந்தவல்லி பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட பெண்கள் வாந்தி,பேதியால் அவதிக்கப்பட்டனர். தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக மயக்கம் போட்டு விழுந்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இதையடுத்து, அவர்கள் அந்த பகுதியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். விடுதியில் தயாரிக்கப்பட்ட தரமற்ற உணவு இதற்கு காரணம் என அங்கிருந்த பெண் தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டினர்.

இதுதொடர்பாக  மற்ற ஊழியர்கள், ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில்,  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் குறித்து கேள்வி எழுப்பி, தொழிற்சாலை நிர்வாகம்  தெரிவிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பதற்றமடைந்த  மற்ற தொழிலாளர்கள், நேற்று நள்ளிரவு 11 மணி அளவில் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் குதித்தனர். ஏராளமான பெண்கள் சாலையில் அமர்ந்து போராடியதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து இன்று காலை சம்பவ இடத்துக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உள்பட அதிகாரிகள் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன்பிறகு, சுமார் 10மணி நேரத்துக்கு பிறகு, அவர்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட்டு உள்ளார்.  அதில், உணவு பாய்சன் காரணமாக பாதிக்கப் பட்ட பெண்களுக்கு டயாரியா (வாந்தி பேதி) ஏற்பட்டதாகவும், மொத்தம் 159 பெண்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில்  155 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில்,  4 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.

சிகிச்சை பெற்று வரும் 4 பேரில் 3 பேர் மேத்தா மருத்துவமனையிலும், ஒருவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.