பலாசோர்: 2ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை தாக்கும் அதிநவீன ‘அக்னி பி’ ஏவுகணை 2வது முறையும் வெற்றிபெற்றுள்ளது. ஏற்கனவே ஒருமுறை சோதிக்கப்பட்ட நிலையில், இன்று நடத்தப்பட்ட சோதனையும் வெற்றிகரமாக அமைந்துள்ளது என டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.
ஒடிசா மாநிலத்தின் பலாசோர் அருகே உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவிலிருந்து, இன்று காலை 11 மணிக்கு அக்னி பி ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்தது. அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட, கண்டம் விட்டு கண்டம் பாயும் அதி நவீன புதிய தலைமுறை ஏவுகணையான இது 1,000 முதல் 2,000 கி. மீ. தூரத்தை தாக்கும் திறன் கொண்டது.
இந்த ஏவுகணை சோதனையை கிழக்குக் கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு தொலைதூரத் தொடர்பு நிலையங்கள் மற்றும் ரேடார் நிலையங்களின் மூலம் கண்காணிக்கப்பட்டது.
ஏவுகணையானது நிர்ணயிக்கப்பட்ட பாதையில் பயணித்து மிகத் துல்லியமாக இலக்கை தாக்கியது. அக்னி ரக ஏவுகணைகளில், அடுத்த தலைமுறைக்கான தொழில்நுட்பங்கள் அடங்கிய , மேம்பட்ட வகையாக அதிநவீன புதிய தலைமுறை அக்னி பி விளங்குகிறது. இந்த ஏவுகணை சுமார் 1,000 முதல் 2,000 கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்து இலக்கை எட்டும் திறன் பெற்றுள்ளது என்றும், ஏற்கெனவே கடந்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி அக்னி பி ஏவுகணை முதல்கட்ட சோதனை வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது முறையாக இன்று சோதனை செய்யப்பட்டது என்றும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ( டிஆர்டிஓ) தெரிவித்து உள்ளது.
. இது அக்னி பி ஏவுகணைகளை விட 50 % எடை குறைவாக இருக்கும் எனவும், எனவே இதனை (ரயில் மற்றும் சாலைகள்) மற்ற இடங்களில் இருந்தும் ஏவலாம் என்றும் , தேவைக்கேற்ப மற்ற இடங்களுக்கு எடுத்துச் செல்லாலம் என்றும், நீண்ட காலத்திற்கு வைத்து பயன்படுத்த ஏதுவானது என்றும் டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.
அடுத்து, 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் செல்லும் வகையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 6 ஏவுகணையை இந்தியா உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.