கோயில் வளாகத்தில் கடை வைக்க அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் ஏலத்தில் பங்கேற்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
ஆந்திர மாநிலம் கர்னூலை அடுத்த ஸ்ரீசைலம் ஸ்ரீ பிரமரமாம்பா மல்லிகார்ஜுன ஸ்வாமி கோயிலில் உள்ள கடைகள் இந்து மதத்தைத் தவிர பிற மதத்தினருக்கு ஏலம் எடுக்கவோ குத்தகைக்கு எடுக்கவோ அனுமதியில்லை என்று 2015 ம் ஆண்டு வெளியான அம்மாநில அரசாணையை மேற்கோள்காட்டி அத்திருக்கோயில் நிர்வாக அதிகாரி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இந்த அறிவிப்பு தொடர்பாக ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது, மாநில அரசின் உத்தரவில் தலையிட முடியாது என்று உயர்நீதிமன்றம் கூறியது.
இந்த தீர்ப்புக்கு எதிராக கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தடை விதித்த போதும் ஏலத்தில் பங்கேற்க அனுமதி வழங்காத செயல் அலுவலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட் மற்றும் பி.வி. நாகரத்னா அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் “மதத்தின் அடிப்படையில் குத்தகைதாரர்கள் மற்றும் கடை வைத்திருப்பவர்களை ஏலத்தில் இருந்து விலக்கி வைக்க முடியாது” என்று தீர்ப்பளித்தனர்.