டெல்லி: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியால் மாநிலங்களவை அவ்வப்போது ஒத்தி வைக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை நடைபெற்ற தொடர் அமளி காரணமாக, வரும் 20ந்தேதி காலைவரை ஒத்திவைத்து, அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்து உள்ளார்.
அதுபோல லக்கிம்பூர் கேரி வன்முறை குறித்து விவாதிக்க வலியுறுத்தி மக்களவையிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், மதியம் 2மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
பாராளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் அத்துமீறி நடந்து கொண்டதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாயா வர்மா, ஆர். போரா, ராஜாமணி பாட்டீல், சையத் நசீர் ஹுசைன், அகிலேஷ் பிரசாத் சிங், சிவசேனை எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. டோலா டென் உள்ளிட்ட 12 எம்.பி.க்கள் மாநிலங்களவையிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த எம்.பி.க்கள் தங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்காதவரை இடைநீக்கம் தொடரும் என அறிவிக்கப்பட்டு, நடப்பு குளிர்கால கூட்டத்தொடரிலும் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில், 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் பிரச்சினை எழுப்பி உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் 12 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்யும் முடிவை திரும்பப் பெற வாய்ப்பில்லை என அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திட்டவிட்டமாக தெரிவித்துள்ளார். அதேசமயம் மன்னிப்பு கேட்க முடியாது என எதிர்க்கட்சிகள் திட்டவட்டமாக தெரிவித்து விட்டன.
இந்த விவகாரத்தை தினந்தோறும் மாநிலங்களவை கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். மேலும் வெளிநடப்பும் செய்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று காலை இந்த விவகாரத்தை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீண்டும் எழுப்பினர். பின்னர் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இன்று காலையும் அவை கூடியதும், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூச்சல் குழப்பம் ஏற்படுத்தி அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவையில் பேசிய அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, இன்று நான் ஹவுஸ் லீடர் மற்றும் எதிர்க்கட்சகிளை சில மூத்த உறுப்பினர்களுடன் பேசினேன். உங்கள் ஒவ்வொருவரிடமும் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன், சபை வழக்கம் போல் செயல்படுவதைப் பார்க்க, தயவுசெய்து ஒருமித்த கருத்துக்கு வரவும். உங்களுக்குள் விவாதம் நடத்த வசதியாக, திங்கள்கிழமை கூடுவதற்கு சபையை ஒத்திவைக்கிறேன் என கூறி, மாநிலங்களவை வரும் 20-ம் தேதி காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.
அதேவேளையில் மக்களவையிலும், உ.பி.மாநிலத்தின் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டது மற்றும் வன்முறை குறித்து விவாதிக்க வலியுறுத்தி மக்களவையிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், மதியம் 2மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.