திருப்பாவை – முதல் பாடல்
ஸ்ரீ ஆண்டால் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தர். இந்த 30 நாட்களும் அவர் தன்னுடன் நோன்பு இருக்க தனது தோழிகளை அழைப்பது போல் பாடிய பாடல்கள் திருப்பாவை ஆகும்.
இன்று நாம் திருப்பாவை முதல் பாடலைக் காண்போம்
திருப்பாவை 1 :
மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாரா யணனே நமக்கே பறைதருவான்
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்!
பொருள் :
இன்று மார்கழி மாதம் பௌர்ணமி தினம்.
நீராட விருப்பமுடைய அழகிய ஆபரணங்கள் அணிந்தப் பெண்களே!
செல்வம் நிறைந்த ஆய்ப்பாடியில் உள்ள இளம் பெண்களே!வாருங்கள் !
கூர்மையான வேல் கொண்ட, தீமை நினைப்பவருக்குக் கொடியவனான நந்தகோபனுடைய குமாரனும், அழகு நிறைந்த மலர் போன்ற கண்களையுடைய யசோதையின் இளம் சிங்கமும்,
கரிய மேகம் போல மேனியும்,செந்தாமரையை ஒத்தக் கண்களும்,கதிரவன் போன்ற ஒளியையும்,சந்திரனைப் போன்ற முகமும், கொண்டவனான நாராயணன் நாம் விரும்பியதைக் கொடுப்பான்.
எனவே உலகத்தில் இருப்பவர்கள் எல்லாரும் புகழும் வண்ணம்,இந்த நோன்பில் ஈடுபட்டு,கண்ணனை வணங்கி,அவன் புகழைக் கேட்டு நினைவில் நிறுத்தி கொள்வோம்.