கோவை

மிழக அரசின் செய்தித்துறை அமைச்சரான சாமிநாதன் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் செய்தித்துறை அமைச்சராக வெள்ளைக்கோவிலை சேர்ந்த சாமிநாதன் பதவி வகித்து வருகிறார்.   இவரிடம் நேர்முக உதவியாளராக தாராபுரத்தைச் சேர்ந்த செல்வமுத்து பணி  புரிந்து வருகிறார்.  கடந்த 13 ஆம் தேதி செல்வமுத்துவுக்குச் சளி மற்றும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சோதனை செய்ததில் கொரோனா தொற்ரு கண்டறியப்பட்டது.

அதையொட்டி அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பினார்.  அவருடன் நேரடி  தொடர்பிலிருந்த அமைச்சர் சாமிநாதன் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.  அவருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது.  எனவே அமைச்சர் சாமிநாதன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையொட்டி அமைச்சரின் அலுவலகத்தில் பணி புரிவோர் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்குப் பரிசோதனை செய்ததில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது.  அமைச்சர் சாமிநாதன் ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டும் அவருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.