திருவல்லவாழ் ஸ்ரீ கோலப்பிரான் ஆலயம்
திருவல்லவாழ் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது திருவல்லா, ஸ்ரீ வல்லப ஷேத்ரம் எனவும் அழைக்கப்படுகின்றது.கருடபுராணம், மத்ஸ்ய புராணம் போன்றவற்றில் இத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இறைவர் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் திருவாழ்மார்பன், ஸ்ரீ வல்லபன், கோலப்பிரான் என அழைக்கப்படுகிறார்.இறைவி செல்வத் திருக்கொழுந்துநாச்சியார், வாத்ஸல்ய தேவி என அழைக்கப்படுகிறார். இத்தல தீர்த்தம் கண்டகர்ண தீர்த்தம், பம்பை தீர்த்தம் ஆகியனவாகும். இதன் விமானம் சதுரங்க கோல விமானம் எனும் அமைப்பைச் சேர்ந்தது.
தாயார் : ஸ்ரீ வாத்ஸல்ய தேவி
மூலவர் : ஸ்ரீ கோலப்பிரான்
மண்டலம் : மலை நாடு
இடம் : கோட்டயம்
கடவுளர்கள்: ஸ்ரீ கோலப்பிரான் பெருமாள்,ஸ்ரீ வாத்ஸல்ய தேவி
இக்கோயிலை ‘ஸ்ரீ வல்லப க்ஷேத்திரம்’ என்று அழைக்கின்றனர். சங்கர மங்கலத்தைச் சேர்ந்த ஒரு பதிவிரதை ஏகாதசி விரதம் இருந்து, துவாதசி அன்று ஒரு பிரம்மச்சாரிக்கு உணவு படைத்து வந்தாள். ஒருமுறை தோலகாசுரன் என்ற அரக்கன், அப்பெண்ணின் விரதத்திற்கு இடையூறு செய்தான். பகவான் பிரம்மச்சாரி வேடத்தில் வந்து அரக்கனைக் கொன்று உணவு அருந்த வந்தார். அப்போது பெருமாள் தனது திருவாழ் மார்பை மறைப்பதைக் கண்ட பதிவிரதை, உண்மை உணர்ந்து, தமக்கு ஸேவை சாதிக்குமாறு பகவானை வேண்டினார். அவளது வேண்டுகோளின்படி திருவாழ்மார்புடன் ஸேவை சாதித்தார். அதனால் பகவான் ‘திருவாழ்மார்பன்’ என்று பெயர் பெற்றார்.
மூலவர் ஸ்ரீ வல்லபன், கோலப்பிரான், திருவாழ்மார்பன் என்னும் திருநாமங்களுடன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயார் செல்வத்திருக்கொழுந்து நாச்சியார், வாத்ஸல்ய தேவி ஆகிய திருநாமங்களுடன் காட்சி அளிக்கின்றார்.
கண்டாகர்ணன் என்பவன் முதலில் சிவபக்தனாக இருந்து, பிறகு சிவபெருமான் உபதேசித்தபடி பெருமாளின் அஷ்டாக்ஷர மந்திரத்தை ஜபித்துக் கொண்டு தவம் செய்தான். அப்போது தன் செவியில் கிருஷ்ண நாமம் தவிர மற்ற எதுவும் விழாதிருக்க, தனது காதில் இரண்டு பொன்மணிகளை அணிந்து அது சப்திக்கும்படி அசைத்துக் கொண்டு தவம் செய்தான். பெருமாள் அவனுக்குக் காட்சி தந்து மோட்சம் அளித்ததாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
இக்கோயிலில் சுதர்சன சக்கரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. கோயிலின் உள்ளேயும், வெளியேயும் உயரமான துவஜஸ்தம்பம் உள்ளது. இது முழுவதும் பொன் தகடால் வேயப்பட்டுள்ளது. தற்போது ‘திருவல்லா’ என்று அழைக்கப்படுகிறது.
எர்ணாகுளத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் இரயில் பாதையில் உள்ள திருவல்லா இரயில் நிலையத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.