இரும்பு பெண்மணி இந்திரா காந்தியால் இதே நாளில் உருவான வங்க தேசம்
***1947 ஆம் ஆண்டில் நம் நாடு பிரிவினை அடைந்து, பாகிஸ்தான் தனி நாடாகப் பிரிந்தது!
அப்போது நாட்டின் வடமேற்கு மூலையில் மேற்கு பாகிஸ்தானும், வடகிழக்கு மூலையில் கிழக்கு பாகிஸ்தான் என்று இரு புறமும் பிரிந்து பாகிஸ்தான் ஆட்சி நடந்து வந்தது!
ஆனால், கிழக்கு பாகிஸ்தானுக்கு எந்த உதவிகளும் செய்யாமல் ‘மேற்கு அதிகார மையமாக ‘மேற்கு பாகிஸ்தான் ஆணவத்துடன் நடந்து கொண்டது!
பொறுமையின் எல்லையைக் கடந்த கிழக்குப் பாகிஸ்தான் மக்கள், கொதித்து எழுந்து போராட்டங்களில் இறங்கினர்!
கிழக்குப் பாகிஸ்தானில் பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன! உடனடியாக அங்கு பாக் ராணுவம் அனுப்பப்பட்டது! அப்பாவி மக்கள் அநியாயமாக சுட்டு வீழ்த்தப்பட்டனர்! இதனால் பொங்கி எழுந்த மக்களுக்கு ஆதரவாக வங்கத்தில் தலைவர் ஷேக் முஜிபுர் ரகுமானின் “முக்தி வாகினி” எனற விடுதலைப் படை களத்தில் இறங்கி பாக் ராணுவத்தின் மீது எதிர்த் தாக்குதல்கள் நடத்தப்பட்டன! ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் அரசு, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘பேட்டன் டாங்க்’குகள், மூலம், கிழக்குப் பாகிஸ்தான் மக்களைக் கொன்று குவித்தன! பாக் ராணுவம் அப்பாவி மக்களை வேட்டையாடியது!
உயிருக்குப் பயந்த லட்சக் கணக்கான அப்பாவி மக்கள் அகதிகளாக இந்தியாவுக்கு வந்தனர்!
இதனால் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது! பாகிஸ்தானின் அத்து மீறிய செயல்களை இந்திய அரசு கண்டித்தது!
இதற்குப் பதிலாக, 1971 ஆம் ஆண்டின் துவக்கத்தில் நமது நாட்டின் வடக்கு எல்லைகளில் பாகிஸ்தான் திடீரென்று தன் விமானப்படை மூலம் குண்டுகளை வீசித் தாக்கியது!
இதற்கு உடனடியாக நமது ராணுவமும் எதிர்த் தாக்குதல் நடத்தியது! இச்சூழலில் உலக நாடுகள் சபை ( ஐ. நா.) தலையிட்டு, இரு நாடுகளின் போர்ப் பதட்டத்தைத் தணித்தது!
இருப்பினும் பாகிஸ்தானோ, நமது எல்லைப் பகுதிகளில் தனது தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வந்தது!
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி ஒரே நேரத்தில் மேற்கு, கிழக்கு பாகிஸ்தான் மீது தரை, விமானம், கப்பல் என்று முப்படைகளும் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்!
உடனே நமது கப்பல் படை ,மின்னல் வேகத்தில் பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தைக் குண்டு மழை பொழிந்து தாக்கியது! அந்தத் துறைமுகம் தீப்பற்றி எரிந்தது!
இதே நேரத்தில் நமது பெங்களூரில் தயாரிக்கப் பட்ட ‘ நாட் ‘ விமானங்கள் பாகிஸ்தானின் அமெரிக்க விமானங்களைச் சுட்டு வீழ்த்தின!
நமது ஆவடி டாங்குகள், அமெரிக்க’ பேட்டன் டாங்குகளை’ துவம்சம் செய்தன!
நமது தரைப்படையோ,புயல் வேகத்தில் பாக் படைகள் மீது கடும் தாக்குதல் நடத்தி, ஒரு புறம் ராவல்பிண்டி, மறுபுறம் டாக்காவை நோக்கி முன்னேறியது! நான்கே நாட்களில் டாக்காவை நமது ராணுவம் பிடித்தது!
நமது முப்படைகளின் இணைந்த தாக்குதல்கள், பாக் படைகளுக்குக் கடும் சேதத்தை ஏற்படுத்தின!
இறுதியில் பாகிஸ்தான், நம்மிடம் தோல்வியை ஒப்புக் கொண்டு சரணடைந்தது!
கிழக்குப் பாகிஸ்தான், பாக் பிடியிலிருந்து விடுதலை பெற்றது!அப் போரில் நமது ராணுவத்துடன், கிழக்குப் பாகிஸ்தான் தலைவர் ஷேக் முஜிபுர் ரகுமானின் ‘ முக்தி வாகினி’ படையும் இணைந்து போரிட்டது!
ஆக, பாகிஸ்தான் பிடியில் இருந்து நம்மால் விடுதலை பெற்று, இன்று உலக அரங்கில் ” வங்க தேசம் “உருவானது!
கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (டிசம்பர் 16 ) தான்இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க போர் நடந்தது!
இந்த வரலாற்று வெற்றிக்குக் காரணமான இந்திரா காந்தியின் உறுதியான இந்த நடவடிக்கையால், உலக அரங்கில் அவர், “இரும்புப் பெண்மணி” என்று புகழ் பெற்றார்!
*** ஓவியர் இரா. பாரி.