சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் ரூ1.97 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய ஓட்டுநர் தேர்வுத் தளத்துடன் கூடிய வாகன அலுவலகத்தைக் காணொலிக் காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து, கூட்டுறவுத்துறை சார்பில் 70 புதிய கூட்டுறவு மருந்தகங்களைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
திய ஓட்டுநர் தேர்வுத் தளத்துடன் கூடிய வாகன அலுவலகம் திறப்பு குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “முதல்வர் ஸ்டாலின் இன்று (16.12.2021) தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத்துறை சார்பில் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, வட்டாரப் போக்குவரத்து அலுவலகக் கட்டுப் பாட்டில் உள்ள செய்யாறு, மோட்டார் வாகன அலுவலகத்திற்கு 1 கோடியே 97 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஓட்டுநர் தேர்வுத் தளத்துடன் கூடிய அலுவலகக் கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.
போக்குவரத்துத்துறை அலுவலகப் பணிகளான பழகுநர் மற்றும் ஓட்டுநர் உரிமங்கள் வழங்குதல், புதிய வாகனங்கள் பதிவு செய்தல், போக்குவரத்து வாகனங்க ளுக்கான தகுதிச் சான்றிதழ் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல், வாகனங்களுக்கான சாலை வரிகளை வசூலித்தல், வாகனத் தணிக்கை போன்ற பல்வேறு பணிகளைச் சிறப்பாகவும், துரிதமாகவும் நிறைவேற்றிடவும், பொதுமக்கள் சிரமமின்றி போக்குவரத்துத்துறை தொடர்பான சேவைகளைப் பெறவும் புதிய பகுதி அலுவலகங்களைத் தோற்றுவித்தல், பகுதி அலுவலகங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகமாகத் தரம் உயர்த்துதல், ஓட்டுநர் தேர்வுத்தள வசதிகளுடன் புதிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களை அமைத்தல் போன்ற பல்வேறு திட்டங்களைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகக் கட்டுப்பாட்டில் உள்ள செய்யாறு, மோட்டார் வாகன அலுவலகத் திற்கு 1 கோடியே 97 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஓட்டுநர் தேர்வுத் தளத்துடன் கூடிய அலுவலகக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இவ்வலுவலகம், பொதுமக்கள் காத்திருப்பு அறை, மோட்டார் வாகன ஆய்வாளர் அறை, பழகுநர் உரிமம் மற்றும் ஓட்டுநர் உரிமம் வழங்கும் அறை, கணினி அறை, கூட்டரங்கு உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர், போக்குவரத்து ஆணையர் நடராசன், அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதைத்தொடர்ந்து, கூட்டுறவு மருந்தகங்கள் திறக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (16.12.2021) தலைமைச் செயலகத்தில், கூட்டுறவுத் துறை சார்பில் தமிழகத்தின் 36 மாவட்டங்களில் 70 புதிய கூட்டுறவு மருந்தகங்களைப்‘ பொது மக்களின் பயன்பாட்டிற்காகக் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டில் கிராமப் பொருளாதார வளர்ச்சியில் கூட்டுறவு இன்றியமையாப் பங்கினை ஆற்றி வருகின்றன. மிகப்பெரிய சமூகப் பொருளாதார இயக்கமான கூட்டுறவு இயக்கம், வறுமையை ஒழிக்கவும், சமூக ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றி வருகிறது. அந்த வகையில், கூட்டுறவுத் துறை யின் 2021-22ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில், தமிழ்நாட்டில் கூட்டுறவுத் துறை மூலம் 303 மருந்தகங்களில் விற்கப்படும் மருந்துகளுக்கு 20 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த மருந்தகங்கள் நியாயவிலைக் கடைகள் போல வெளிச்சந்தைகளில் மருந்து பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் மிகவும் முக்கியமான சமூகப் பங்காற்றுகின்றன. இந்த எண்ணிக்கையை அடுத்த 5 ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு 60 கடைகள் வீதம் மொத்தம் 600ஆக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் 70 புதிய கூட்டுறவு மருந்தகங்களைத் தமிழக முதல்வர் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.
தொடங்கப்பட்டுள்ள மருந்தகங்கள் சிறந்த பொலிவுடன் விளங்கிட, அவற்றில் கணினி மற்றும் குளிர்சாதன வசதிகள் உள்ளிட்ட போதுமான உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மருந்தகத்திலும் ஒரு மருந்தாளுநர் மற்றும் உதவியாளர் பணியில் இருப்பர்” என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.